25.02.2025, கம்பம், தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் கம்பத்தில் உணவு பாதுகாப்புதுறை நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் நேரடி சோதனை.
தேனி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புதுறைக்கு நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் மூலம் உணவு பாதுகாப்புத்துறையினர் கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராகவன் உத்தரவின் பேரில் கம்பத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையில் நடமாடும் பகுபாய்வு வாகன இளநிலை ஆய்வாளர் சிவா உள்ளிட்டோர் நடமாடும் பகுபாய்வு வாகனம் மூலம் கம்பம் நகராட்சி பகுதிகளில் சாலையோர துரித உணவகங்கள், சிக்கன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு சில உணவகங்களில் கலர் சாயம் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு சான்று இல்லாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. தொடர்ந்து இதுபோன்ற சோதனையின் போது உணவு பாதுகாப்பு சான்று இல்லாமல் இருந்தால் அந்த கடையின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் குறித்தும், தரமற்ற உணவுகள் மற்றும் புகார்கள் குறித்து உணவு பாதுகாப்பு இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் புகார்கள் பதிவேற்றம் செய்வது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பல்வேறு கடைகளில் உணவுகளின் மாதிரிகள், குடிநீர் ஆகியவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டன.
