23.02.2025, சின்னமனூர்,தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் 250 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் அஇஅதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பாக, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு எல்கை பந்தயம் நடத்தினர்.
இந்தப் போட்டியை ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார் துவக்கி வைத்தார். துவக்கி வைக்கும் பொழுது முதல் வண்டியை தானே அமர்ந்து வண்டியை ஓட்டி துவக்கி வைத்தார்.
மேலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி சின்னமனூரில் இருந்து தென்பழனி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான் மாடு, இளம்சிட்டு,
பெரிய மாடு என 8 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது, பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்றிருந்த பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், 2வது பரிசாக 40 ஆயிரம் ரூபாய், 3வது பரிசாக 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் கோப்பையினை பரிசாக வழங்கினார்கள்.
இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
