சுருளி அருவி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்!

முக்கிய செய்திகள் விவசாயம்

22.02.2025 – சுருளி, தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக சுருளி அருவி பகுதி மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் யானைக் கூட்டங்கள் முகாமிட்டு வருகின்றது.

இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நாள்தோறும் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக யானைகள் இந்த விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து அவதி அடைந்து வருகின்றனர்.

நேற்று இரவு சதீஷ்குமார் என்பவர் தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் உலா வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினரிடம் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து யானைகள் இப்பகுதிக்கு வந்து செல்வதால் அதிகாலை நேரங்களில் தோட்ட வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கும், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு உயிர் சேதம் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறி தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி: சதீஷ்குமார் விவசாயி